பனப்பாக்கத்தில் தடுப்பணை, கலங்கல் சேதம் ஏரியில் மழைநீரை சேமிப்பதில் சிக்கல்
பொன்னேரி:பனப்பாக்கம் பாசன ஏரிக்கு மழைநீர் கொண்டு வருவதற்காக, அருகில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை மற்றும் கலங்கல் பகுதி சேதமடைந்து இருப்பதால், மழைநீரை சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், நீர்வளத்துறையினர் கட்டுப்பாட்டில், 250 ஏக்கரில் பாசன ஏரி உள்ளது. இந்த ஏரியில் தேங்கும் மழைநீர், 300 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது. இந்த ஏரிக்கு 'உள்வாய்' இல்லாமல் சுற்றிலும் கரை கொண்டதாக உள்ளது. ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக, அதனருகே உள்ள மேய்க்கால் நிலப்பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர், மேற்கண்ட நிலப்பகுதியில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து கால்வாய் வழியாக பனப்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்த தடுப்பணை ஆங்காங்கே சேதமடைந்தது. ஆனால், தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், தடுப்பணை பகுதிக்கு வரும் மழைநீர், உடைப்புகள் வழியாக வெளியேறி, பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரிக்கு சென்று வீணாகிறது. இதனால், ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அதேபோன்று, ஏரியின் கலங்கல் பகுதியும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக, கனமழையில் நேரடியாக ஏரிக்கு கிடைக்கும் தண்ணீரையும் பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. கலங்கலில் உள்ள ஓட்டை மற்றும் உடைப்புகள் வழியாக, ஏரியில் தேங்கும் சிறிதளவு தண்ணீர் வெளியேறி வீணாகிறது. ஒவ்வொரு ஆண்டும், அதிக மழைப்பொழிவு இருந்தும், தடுப்பணை மற்றும் கலங்கல் பகுதிகள் சேதமடைந்து இருப்பதால், மழைநீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் விரக்திஅடைந்துள்ளனர். அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை மேய்க்கால் நிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என, பலமுறை மனு அளித்துள்ளோம். அதேபோல, கலங்கல் சேதம் குறித்தும் தெரிவித்து உள்ளோம். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. ஆண்டுக்கு இருபோகம் விவசாயம் செய்த நிலையில், தற்போது ஒரு போகமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தான் நீடிக்கிறது. ஏரியை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். - பி.ஆர்.எழிலசரன், விவசாயி, பனப்பாக்கம், பொன்னேரி.விவசாயத்திற்கு விரைவில் 'குட்பை' ஏரிக்கு நீர்வரத்திற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், குறைந்தளவு தண்ணீரே தேங்குகிறது. இது விவசாயத்திற்கு போதுமானதாக இரு ப்பதில்லை. விரைவில் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். ஏரியை ஆழப்படுத்தவும், அதிலுள்ள கருவேல மரங்களை அகற்றவும் வேண்டும். தடுப்பணை மற்றும் கலங்கல் பகுதிகளை சீரமைக்க வேண்டும். இப்பணிகளை பருவ மழைக்கு முன் மேற்கொண்டு, ஏரியை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத் தை நீர்வளத்துறையினர் பாதுகாக்க வேண்டும். - பி.ஜி.கணபதி, விவசாயி, பனப்பாக்கம், பொன்னேரி.