மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் ஆசானபூதுார்மேடில் மக்கள் அச்சம்
பொன்னேரி:ஆசானபூதுார்மேடில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருப்பதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீஞ்சூர் ஒன்றியம், வஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆசானபூதுார்மேடு கிராமத்தில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்துள்ளது. தொட்டியின் கான்கிரீட் துாண்கள் சேதமடைந்து, ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. விரிசல்கள் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். பல மாதங்களாக நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படாத நிலையில், அதிலிருந்து வினியோகிக்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் கிராம மக்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், ஆசானபூதுார்மேடு - மடிமைகண்டிகை சாலையை ஒட்டி தொட்டி அமைந்திருப்பதால், இவ்வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சேதமடைந்த தொட்டியை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.