உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெமிலி ஏரிக்கரை சாலையில் சேதமடைந்த தடுப்புகள்

நெமிலி ஏரிக்கரை சாலையில் சேதமடைந்த தடுப்புகள்

திருத்தணி:திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில், நெமிலி ஏரிக்கரையில், 1 கி.மீ., துார மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழியாக அதிகாலை 3:00 மணி முதல் நள்ளிரவு வரை அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.குறிப்பாக கார், வேன், லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன் நெமிலி ஏரிக்கரை செல்லும் சாலையோரம், திருத்தணி நெடுஞ்சாலைத் துறை சார்பில், இருபுறமும் அலுமினிய தகடுகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.மேலும், ஏரிக்கரை வளைவிலும் தடுப்புகள் அமைத்து, எதிரே வரும் வாகனங்கள் அறிந்து கொள்ளும் வகையில், 'ரிப்ளக்டர்' வசதியும் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், முறையாக பராமரிக்காததால் அலுமினிய தகடுகள் சேதமடைந்து உள்ளன.சாலையின் இருபுறமும் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் நெமிலி ஏரிக்கரையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, சேதமடைந்த தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ