சாலை வளைவில் நிறுத்திய பறிமுதல் லாரியால் அபாயம்
ஆவடி:ஆவடி அடுத்த கொள்ளுமேடு செல்லும் சாலையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஆற்று மணலுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி, ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையம் எதிரில், சாலை வளைவில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இதனால், இவ்வழியாக வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது, விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.