உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கு வரும் 14 வரை அவகாசம் நீட்டிப்பு

நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கு வரும் 14 வரை அவகாசம் நீட்டிப்பு

திருவள்ளூர்:சொர்ணவாரி பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய, வரும் 14ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து, வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில், பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய, வரும் 14ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு, பூர்த்தி செய்யப்பட்ட, கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பம், நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்கள் பயன்படுத்தி, விவசாயிகள் பதிவு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் பயனடைய, நெல் 726, கம்பு 240, பச்சை பயிறு 438, நிலக்கடலை 624, உளுந்து 438 ரூபாய் பிரீமியம் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யும் போது, விவசாயிகள் பெயர் மற்றும் முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விபரங்களை சரியாக கவனித்து பதிவு செய்து கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு, தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை