நிரந்தர நெல் கொள்முதல் நிலைய கட்டடம் ரூ.3 கோடியில் 10 இடங்களில் கட்ட முடிவு
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில், 10 ஒன்றியங்களில், 3 கோடி ரூபாயில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 65க்கும் மேற்பட்ட இடங்களில், அரசு சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், சில கொள்முதல் நிலையங்களுக்கு, அரசுக்கு சொந்தமான கட்டடம் இல்லாததால், வாடகை இடங்கள், சமுதாய கூடம் போன்ற இடங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சொந்த கட்டடம் இல்லாததால், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைத்திருப்பதால், மழை பெய்யும் போது நெல் முளைத்துவிடுகிறது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், திருவள்ளூர், கடம்பத்துார், பூண்டி, திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் மீஞ்சூர், சோழவரம், ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி ஆகிய 10 ஒன்றியங்களில், நெல் கொள்முதல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட, மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், முதற்கட்டமாக 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கட்டடம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில், ஒரு கட்டடத்திற்கு, 30 லட்சம் ரூபாய் வீதம், 10 கட்டடங்களுக்கு 3 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது. இப்பணிகள், 100 நாள் தொழிலாளர்கள் மூலம், நான்கு மாதத்திற்குள் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.