முருகன் கோவில் தரிசனம் குறித்து அவதுாறு: போலீசில் புகார் மனு
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் இலவச தரிசனம் மற்றும் 100 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். சென்னையைச் சேர்ந்த மஞ்சு குரூப்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் பகுதியில் வீட்டுமனை விற்பனை தொடர்பாக, சமூக வலைதளங்களில் விளம்பர வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், வீட்டுமனை வாங்குபவர்களுக்கு திருத்தணி முருகன் கோவிலில் வி.ஐ.பி., தரிசனம் செய்து தரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில், பிரபல டிவி சீரியல் நடிகை நடித்துள்ளார். திருத்தணி முருகன் கோவிலில், வி.ஐ.பி., தரிசனம் ரத்து செய்துள்ள நிலையில், மக்களை ஏமாற்றும் வகையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் போலியாக விளம்பரம் செய்துள்ளது. இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி, நேற்று திருத்தணி டி.எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளார்.