சிறுவாபுரி குளம் புதுப்பிப்பு இறுதி பணிகளில் தொய்வு
கும்மிடிப்பூண்டி,திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பின்புறம் குளம் உள்ளது.அந்த குளத்தை சீரமைக்க, 2023, ஆகஸ்ட் மாதத்தில், 3.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.தொடர் மழை, புயல் போன்ற காரணங்களால் புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பின், 2023, டிசம்பரில் பணிகள் துவங்கப்பட்டன.குளத்தை ஆழப்படுத்தி, மத்தியில் நீராழி மண்டபம் நிறுவி, படித்துறை அமைத்து, சுற்றி நடைபாதை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விறுவிறுப்பாக துவங்கப்பட்ட பணிகள், இடம் ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கல்களால் முடங்கியது.அதற்கு தீர்வு ஏற்பட்ட நிலையில், ஏழு மாதங்களுக்கு முன் மீண்டும் பணிகள் தொடரப்பட்டன. இறுதி கட்ட பணிகள் எட்டிய நிலையில், மீண்டும் பணிகள் முடங்கியதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் தாமதிக்காமல், உடனடியாக பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என, அவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.இது குறித்து ஹிந்து அறநிலைய துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'சுற்றுச்சுவர் மீது இரும்பு கிரில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் எஞ்சியுள்ளது. அந்த பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்படும்' என, தெரிவித்தார்.