திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.பெரும்பாலான பக்தர்கள் பேருந்து, கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மலைப்பாதை வழியாக மலைகோவிலுக்கு சென்றதால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். காலை,10:00 முதல், மாலை, 6:30 மணி வரை மலைப்பாதையில் பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு நீதிமன்ற வளாகம் பின்புறத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. கோவில் பேருந்துகள், தனியார் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.நேற்று பொது வழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசித்தனர்.நுாறு ரூபாய் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் சென்று மூலவரை வழிப்பட்டனர்.