நகராட்சியின் எச்சரிக்கையை மீறி பேனர்கள் வைத்ததால் அதிருப்தி
பொன்னேரி:பொன்னேரி நகராட்சியின் எச்சரிக்கையை மீறி, தொடர்ந்து விளம்பர பலகைகள் வைக்கப்படுவதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையை மறைத்து விளம்பர பலகைகள் வைப்பதாகவும், அதை தடுக்க வேண்டும் எனவும் கூறி, சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, பொன்னேரி நகராட்சி நிர்வாகம், இப்பகுதியில், 'விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது எனவும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் எச்சரிக்கை செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி, தொடர்ந்து அப்பகுதியில் பேனர்கள் வைக்கப்படுகின்றன. கடந்த 6ம் தேதி, காவலர் தினத்தை முன்னிட்டு, தனியார் அமைப்பு ஒன்று, பல்வேறு காவல் துறை அதிகாரிகளின் படங்களுடன் பேனர் வைத்துள்ளது. அந்த பேனர் அப்பகுதியில் இருந்து நேற்று வரை அகற்றப்படவில்லை. காவல் துறை அதிகாரிகளின் புகைப்படங்களுடன் பேனர் இருப்பது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.