திருத்தணி நகராட்சி அதிகாரிகள் மீது தி.மு.க., பெண் கவுன்சிலர் அதிருப்தி
திருத்தணி,திருத்தணி நகராட்சியில், மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில், ஐந்தாவது வார்டு ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் குமுதா கணேசன், நகராட்சி ஆணையரிடம் அளிக்கும் மனுக்கள் மீது, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது.இதனால், தன் வார்டில் வளர்ச்சி பணிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை என, பெண் கவுன்சிலர் அதிருப்தியில் உள்ளார்.இதுகுறித்து கவுன்சிலர் குமுதா கூறியதாவது:முருகப்ப நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பழுதடைந்த வகுப்பறை கட்டடம் பல மாதங்களாக பூட்டப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி இல்லை.மாதந்தோறும் நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் ஆசிரியர்கள், உறுப்பினர்கள், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர்.நானும் ஒரு மாதம் முன்பே, பள்ளிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தேன். மேலும், அது தொடர்பாக மனுவும் அளித்தேன். ஆனால், தற்போது வரை நகராட்சி அதிகாரிகள் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்யவில்லை.அதேபோல், கடந்த ஆறு மாதமாக முருகப்ப நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வெளியேறுவதற்கு வழியின்றி குளம்போல் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது.கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது என, பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் வார்டை நகராட்சி அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.