உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரேஷனில் பொருட்கள் வினியோகம் சிலருக்கு பயன்; பலருக்கு ஏமாற்றம்

ரேஷனில் பொருட்கள் வினியோகம் சிலருக்கு பயன்; பலருக்கு ஏமாற்றம்

திருவாலங்காடு: திருத்தணி தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில், நேற்று பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. உரிய அறிவிப்பு இல்லாததால், சில நுகர்வோர் பயனடைந்தனர்; பலர் ஏமாற்றம் அடைந்தனர். திருத்தணி தாலுகாவில் திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு உட்பட ஆறு குறுவட்டங்கள் உள்ளன. இங்குள்ள 74 கிராமங்களில், 137 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகள் வாயிலாக, 65,856 ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று, அரசு பொது விடுமுறை அளித்திருந்தது. ஆனால், திடீரென நேற்று ரேஷன் கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டது. நேற்று காலை முதல் மாலை வரை ரேஷன் கடைகள் இயங்கின. பெரும்பாலானோர் தீபாவளியை கொண்டாட உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். பலர் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இதனால், பெரும்பாலான ரேஷன் கடைகளில், 10 - 20 பேர் கூட வரவில்லை. மேலும், ரேஷன் திறப்பு குறித்து முறையாக அறிவிப்பு இல்லாததால், சிலர் மட்டுமே பயனடைந்தனர். பலரும் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து நுகர்வோர் கூறியதாவது: ரேஷனில் விரல் ரேகை அல்லது கருவிழி பதிவு செய்யப்பட்டு, பின் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. இதனால், மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நேற்று ரேஷன் கடை திறப்பு என்றால், பலர் பொருட்கள் வாங்கியிருப்பர். அலைச்சல் குறைந்திருக்கும். திடீர் அறிவிப்பால் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில், பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கும் போது, ரேஷன் கடை திறப்பு என்றால், முறையாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ