சாலையை மறித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் ரயில் பயணியர் கடும் அவதி
திருவள்ளூர்: எஸ்.ஐ.ஆரை., கண்டித்து, சாலையை மறித்து தி.மு.க., கூட்டணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தால், ரயில் பயணியர் கடும் அவதிப்பட்டனர். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சியினர், திருவள்ளூர் ரயில் நிலையம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்காக, ரயில் நிலையம் செல்லும் சாலையை மறித்து மேடை அமைக்கப்பட்டது. அக்கட்சியின் அமைப்பு செயலர் பாரதி தலைமை வகித்தார். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். காலை நேரத்தில், ஆர்ப்பாட்டம் நடந்ததால், பணிக்கு செல்வோர், கல்லுாரி மாணவ - மாணவியர் என, ஆயிரக்கணக்கானோர், ரயில் நிலையத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். அ.தி.மு.க., வரவேற்பு திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா கூறியதாவது: வாக்காளர் பட்டியலில், 10 - 20 சதவீதம் வரை பிழை உள்ளது. இரட்டை பதிவு, இறந்தோர் பெயர் நீக்காதது, இடம் மாறி சென்றோர், தவறான, மாறுபாடான பதிவு என, பல்வேறு குளறுபடி உள்ளது. இதை சரிப்படுத்த, இந்த எஸ்.ஐ.ஆர்., ஒரு வாய்ப்பு. இது, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேவையான விஷயம். இதை எதிர்த்து தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறானது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும், திருத்தத்தின் போது, ஓட்டுச்சாவடி முகவர்கள் அளிக்கும் இறந்தவர் விபரம் குறித்து தகவல் அளித்தாலும், அவற்றை நீக்குவதில்லை. தற்போது, நடைபெறும் எஸ்.ஐ.ஆரில், இதுபோன்ற இறந்தவர்களின் பெயரை நீக்க வாய்ப்பு உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியல் சரியாக வந்தால், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர இயலாது என்பதற்காக, தி.மு.க., இரட்டை வேடம் நடத்தி, ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஏற்கனவே, 2002ல் நடந்த வாக்காளர் பட்டியலை தீவிர திருத்தம் செய்யும் போது, பா.ஜ., கூட்டணியில் இருந்த தி.மு.க., எதிர்க்கவில்லை. இந்த ஆர்ப்பாட்டம், மக்களை திசை திருப்பும் முயற்சி. இவ்வாறு அவர் கூறினார்.