திருத்தணி ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம், 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டி, மின்மோட்டார் மூலம் தண்ணீர் குடிநீர் தொட்டிக்கு ஏற்றி தெருக்குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பெரும்பாலான ஊராட்சிகளில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வதில்லை. இதனால் பெண்கள் குடிநீருக்காக கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில், போதிய அளவில் தண்ணீர் இருந்தும், மின்மோட்டார் மூலம் குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி விநியோகம் செய்வதில்லை.குறிப்பாக பம்ப் ஆப்ரேட்டர்கள் சரியான முறையில் வேலை செய்யாமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். பொது மக்கள் குடிநீர் வழங்குமாறு பம்ப் ஆப்ரேட்டர்களிடம் கேட்கும் போது, 'எங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மாத, மாதம் சம்பளம் வழங்குவதில்லை, எதற்காக குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றி வினியோகம் செய்ய வேண்டும்' என அலட்சியமாக கூறுகின்றனர்.தற்போது கோடை காலம் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால் கிராமங்களில் பெண்கள் தண்ணீருக்காக தினமும் சிரமப்படுகின்றனர்.எனவே கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, அனைத்து கிராமங்களிலும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.