திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகள், மாநகர பேருந்துகள் அடிக்கடி, 'மக்கர்' ஆகி பாதி வழியில் நிற்பதால், மாணவ - மாணவியர் பள்ளிக்கு லாரியில் ஆபத்தான நிலையில் பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகள், அடிக்கடி கோளாறு ஏற்பட்டு, பாதி வழியில் நின்று விடுகின்றன. இதனால், ஒவ்வொரு நகரப் பகுதிக்கும் அருகில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன், திருவள்ளூரில் இருந்து இயக்கப்பட்ட, '82சி' என்ற விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து, பாதி வழியில் பிரேக் டவுனாகி நின்றது. ஸ்ரீபெரும்புதுார் வழியாக செங்கல்பட்டு செல்லும் இப்பேருந்து, மேல்நல்லாத்துார், போளிவாக்கம், செங்காடு, தொடுகாடு, ஆயக்கொளத்துார், ஸ்ரீபெரும்புதுார் என, 25க்கும் மேற்பட்ட கிராம மக்களின் அவசிய தேவைக்கு பயன்பட்டு வருகிறது. ஆனால், முறையான பராமரிப்பில்லாமல், அடிக்கடி பிரேக் டவுனாகி சாலையில் நிற்பதால், பயணியர் மற்றும் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஊத்துக்கோட்டையில், விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து பணிமனை உள்ளது. இங்கிருந்து, சென்னை கோயம்பேடு, செங்குன்றம், காஞ்சிபுரம், பொன்னேரி, கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், நெல்லுார், காளஹஸ்தி, சத்தியவேடு ஆகிய பகுதிகளுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக - ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம், மலர் பயிரிடுவது முக்கிய தொழில். வெளியூர்களில் பணியாற்றுவோர், பள்ளி மாணவ - மாணவியர் என, அனைத்து தரப்பு மக்களும், போக்குவரத்திற்கு அரசு பேருந்துகளை மட்டுமே நம்பி உள்ளனர். பாடியநல்லுார் பேருந்து நிலையத்தில் இருந்து, 8 மாநகர பேருந்துகள், செங்குன்றம் - ஊத்துக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, அரசு பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை. சிறப்பு பேருந்துகள் என்ற பெயரில், வெளியூர்களுக்கே அதிக பேருந்துகள் இயக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள், காலாவதியான வாகனங்களாக உள்ளன. பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் போது, அனைத்து பேருந்துகளையும் தள்ளிவிட்டு இயக்க வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி, பெரும்பாலான நேரங்களில், பாதி வழியில் பழுதடைந்து நிற்பது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நிகழ்கிறது. சில தினங்களுக்கு முன், ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில், மாணவ - மாணவியர் தள்ளி விட்டு கிளம்பிய பேருந்தில், ஓடிச்சென்று ஏறி பள்ளிக்கு புறப்பட்டனர். அதேபோல், ஊத்துக்கோட்டையில் இருந்து கிளம்பிய மாநகர பேருந்து, ஆத்துப்பாக்கம் பகுதியில் பழுதடைந்து நின்றது. இதனால் மாணவ - மாணவியர், வேலைக்கு செல்வோர், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். பல நேரங்களில், பாதி வழியில் நிற்கும் பேருந்துகளால், அவ்வழியே வரும் லாரியில் ஏறி, மாணவ - மாணவியர் ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அமாவாசை, பவுர்மணி நாட்களில், சிறப்பு பேருந்துகள் என்ற பெயரில், மேல்மலையனுார், திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு, பாதிக்கும் மேற்பட்ட பேருந்துகள் திருப்பி விடப்படுவதால், வழக்கமாக செல்லும் பயணியர் பேருந்து இன்றி தவிக்கின்றனர். எனவே, மக்கள் பிரதிநிதிகளான கும்மிடிப்பூண்டி த.வெ.க., - எம்.எல்.ஏ., விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தரமான அரசு, மாநகர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், மாணவ - மாணவியர் எதிர்பார்க்கின்றனர். ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் காலாவதியானவை. நல்ல நிலையில் உள்ள பேருந்துகள், தொலை துார பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பேருந்துகள் இல்லை. அரசிடம் இருந்து தரமான, அதிகமான பேருந்துகள் வந்தால் மட்டுமே, இதற்கு தீர்வு ஏற்படும். - போக்குவரத்து அதிகாரி, ஊத்துக்கோட்டை.