ரயில் நிலைய சாலை நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய சாலை நுழைவாயிலில், ஜி.என்.டி., சாலையோரம் இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களால், ரயில் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி நகரை பொறுத்தவரை, ரயில் நிலைய சாலை எப்போதும் மக்கள் நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும். இச்சாலையின் இருபுறமும், நுாற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. மேலும், இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் சென்று வருகின்றனர்.இந்த நுழைவாயிலின் கழுத்தை நெரிப்பது போல், ஜி.என்.டி., சாலையின் இருபுறமும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. மேலும், நுழைவாயிலில் எப்போதும் இரு ஷேர் ஆட்டோக்கள் ரயில் பயணியரை ஏற்றி செல்ல நிற்பது வழக்கம்.சாலையோர கடைகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களால், ரயில் நிலைய சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மற்றும் பாதசாரிகள் நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலால், பல சமயம் ரயிலை தவறவிடும் நிலைக்கு பயணியர் தள்ளப்படுகின்றனர்.எனவே, ரயில் நிலைய சாலை முகப்பில் இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அகற்றி, ஷேர் ஆட்டோக்களை அங்கு நிற்காமல் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.