கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுடன் விரிவாக்கம்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், 3.50 கோடி ரூபாய் செலவில், 7,500 சதுர அடி பரப்பளவில் அவசர சிகிச்சை பிரிவுடன், புறநோயாளி பிரிவு கட்டடம் நிறுவப்பட இருக்கிறது.கும்மிடிப்பூண்டி சிப்காட், சிட்கோ, தேர்வாய் கண்டிகை அதை சுற்றியுள்ள கிராம பகுதிகள் என, 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன.பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்ய, கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரையில், அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு, தினசரி, 900 - 1,100 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இருப்பினும், பாம்பு கடி, மாரடைப்பு, தொழிற்சாலை விபத்துகளில் சிக்கும் தொழிலாளர்களுக்கு, முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.உரிய நேரத்தில் உயிர் காக்கும் அவசர சிகிச்சை அளிக்க முடியாமல் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. நுாற்றுக்கணக்கான தொழிற்சாலை இருந்தும் விபத்து கால அவசர சிகிச்சை வழங்க முடியாத நிலையில் கும்மிடிப்பூண்டி இருந்து வருகிறது.மேலும், மருத்துவமனை வளாகத்தில், 1972ம் ஆண்டு நிறுவப்பட்ட பாழடைந்த பழைய கட்டடத்தில் புறநோயாளி பிரிவு இயங்கி வருகிறது. கும்மிடிப்பூண்டி மக்களின் மருத்துவ சேவையின் அவசியம் கருதி, புதிய புறநோயாளி பிரிவு கட்டடம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டு காலாமாக பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, அவசர சிகிச்சை பிரிவுடன் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் புதிய புறநோயாளி பிரிவு கட்டடம் நிறுவ, தமிழக தேசிய சுகாதார இயக்கம் சார்பில், 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்த மாத துவக்கத்தில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர் ஒருவர் கூறியதாவது:கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், பாழடைந்த நிலையில் உள்ள ஐந்து செவிலியர் மற்றும் மருத்துவர் குடியிருப்புகள் இடிக்கப்பட உள்ளன.அந்த இடத்தில், 7,500 சதுர அடி பரப்பளவில், புறநோயாளி பிரிவு மற்றும் எட்டு படுக்கைகளுடன்கூடிய அவசர சிகிச்சை பிரிவு நிறுவப்பட்ட இருக்கிறது. கட்டுமான பணிக்கான டெண்டர் விடப்பட்ட நிலையில், அடுத்த மாதம் கட்டுமான பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.