திருவள்ளூர்: திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்கத்திற்காக, இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. திருவள்ளூரில் இருந்து 28 கி.மீ.,யில் ஊத்துக்கோட்டை அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ள ஊத்துக்கோட்டையில் இருந்து, அம்மாநிலத்திற்கு செல்ல நாகலாபுரம் மற்றும் சத்தியவேடு என, இரண்டு நெடுஞ்சாலை உள்ளது. பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வழியாக, ஆந்திர மாநிலத்திற்கு ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதையடுத்து, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை வரை, இருவழி சாலையை, நான்கு வழியாக அகலப்படுத்தப்படும் என, முதல்வர் அறிவித்தார். இச்சாலையில் புல்லரம்பாக்கம், பூண்டி, ஒதப்பை, சீத்தஞ்சேரி உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இச்சாலையை அகலப்படுத்தும் போது, சாலையோரம் உள்ள வீடுகள் மற்றும் மரங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டியிருப்பதால், அதற்கான கணக்கெடுப்பு பணியில், நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகள் இல்லாத பகுதியில், சாலையோரம் இடையூறாக உள்ள மரங்களை அகற்றும் பணி, புல்லரம்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் துவங்கியுள்ளது. நெடுஞ்சாலை துறையினர், பொக்லைன் மூலம் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.