ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் கசிவு முற்றிலும் அடைக்க எதிர்பார்ப்பு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, ரயில் பாதையின் கீழ், நகர் மற்றும் சிப்காட் பகுதியை இணைக்கும், சுரங்கப்பாதை உள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன், அந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக, சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர் வழியாக, தண்ணீர் ஊற்றெடுத்து கசிகிறது.இதனால், மழைக்காலம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும், சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால், அதை கடந்து செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கசிவை அடைக்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.அதன்படி, 2022ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில், ரயில்வே நிர்வாகத்தினர், கசிவை அடைக்கும் பணிகள் மேற்கொண்டனர். ‛போம் இன்ஜெக்டர்' முறையில் கசிவுகளை அடைத்தனர்.அடுத்த சில நாட்களில், அடைத்த இடங்களை தவிர்த்து, புதிய இடங்களில் தண்ணீர் கசிய துவங்கியது.தற்போது, கசிவுகள் அதிகரித்து, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை பலவீனமாவதுடன், கசியும் தண்ணீரால் சுரங்கப்பாதை சாலையும் குண்டும் குழியுமாக மாறி வருகிறது.இந்த பிரச்னைக்கு, ரயில்வே நிர்வாகத்தினர் நிரநதர தீர்வு கண்டு முற்றிலும் கசிவை அடைக்க நடவடிக்கை வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.