உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கார்வேட் நகர ராஜா பங்களாவை பாதுகாக்க தொல்லியத்துறை கையகப்படுத்த எதிர்பார்ப்பு

கார்வேட் நகர ராஜா பங்களாவை பாதுகாக்க தொல்லியத்துறை கையகப்படுத்த எதிர்பார்ப்பு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடு குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது பங்களா தோட்டம் கிராமம். இங்கு 300 ஆண்டுகளுக்கு முன், 17ம் நூற்றாண்டில் ஆந்திர மாநிலம், நகரி அருகே உள்ள கார்வேட் நகர ராஜா இப்பகுதியை ஆண்டு வந்ததாக கூறுப்படுகிறது.இப்பகுதியில் அவர் வாழ்ந்தமைக்கு சான்றாக பங்களா இன்றளவும் உள்ளது. 30க்கும் மேற்பட்ட தூண்கள், நுணுக்கமான கட்டட கலையுடன் காட்சியளிக்கிறது. இந்த பங்களா, 40 ஆண்டுகளாக பாழடைந்து காணப்படுகிறது. பங்களாவுக்கு வரும் சாலைகள் மற்றும் பங்களாவிற்கு சொந்தமான நிலங்களை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.பகுதிவாசிகள் பங்களாவை மீட்டு அதற்கு சொந்தமான நிலங்கள் மீட்க வேண்டும் சாலை அமைக்க வேண்டும் என வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, கடந்தாண்டு செப்., 24ம் தேதி வருவாய் துறையினர் அளவீடு செய்தனர். பின், நிலங்கள் மீட்கப்பட்டன. ஊரக வளர்ச்சி துறை வாயிலாக சாலை அமைக்கப்பட்டன. தற்போது கிராம மக்களின் உதவியுடன் பங்களா பராமரிக்கப்பட்டு வருகிறது. இதை தொல்லியல் துறையினர் மீட்டு பராமரிக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

மக்களின் கோரிக்கை ஏற்று கார்வேட் நகர ராஜா பங்களாவிற்கு கிராமத்தின் பிரதான சாலையில் இருந்து செல்ல 15வது நிதிக்குழு மானியத்தில் இருந்து 6 லட்ச ரூபாயில், சிமென்ட் கல் சாலை, 15 அடி அகலம், 150 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டது.

பங்களாவை சுற்றி ஒன்றிய பொது நிதியில் 4 லட்ச ரூபாயில் 80 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சாலையை அமைத்தோம். தற்போது பொங்கல் விழாவின் போது ஏராளமான மக்கள் கூடி மகிழ்கின்றனர் . ராஜாவின் பங்களாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த கட்டடத்தை தொல்லியல் துறை கையகப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.- எஸ்.கவுசல்யா முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்ஆற்காடு குப்பம்திருவாலங்காடு ஒன்றியம்.

ஐந்து கிராம உற்சவர் சங்கமிக்குமிடம்

பங்களாவில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறும். 40 ஆண்டுகளாக அது தடைப்பட்டு போனது. பங்களாவும் பராமரிப்பின்றி போனது. கடந்தாண்டு பங்களாவை சூழ்ந்த ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைத்ததால் இந்தாண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் அன்று ஆற்காடுகுப்பம், தாசிரெட்டிகண்டிகை, இலுப்பூர், லட்சுமாபுரம், நாபளூர் உள்ளிட்ட 5 கிராமங்களில் இருந்து வரும் சோளீஸ்வரர், வெங்கடேசபெருமாள், முருகர் என உற்சவ மூர்த்திகள் சங்கமித்து பங்களாவின் முன் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் அந்த சிறப்பு கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.- டி.எஸ்.சரவணன்,ஆற்காடு குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை