இலுப்பாக்கம் - பனப்பாக்கம் சாலை சீரமைக்க எதிர்பார்ப்பு
பொன்னேரி:பொன்னேரி அடுத்த இலுப்பாக்கம் - பனப்பாக்கம் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்தும் உள்ளன.வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். குறுகலாக உள்ள இந்த சாலையில் பள்ளங்கள் இருப்பதால், எதிரெதிரே வாகனங்கள் கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றன. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களிலும், சரளை கற்களிலும் சிக்கி சிறு சிறு விபத்தில் சிக்கி வருகின்றனர்.அரசு பேருந்துகள், தனியார் பள்ளி வாகனங்கள், இச்சாலை வழியாக சென்று வரும் நிலையில், அசம்பாவிதங்கள் நேரிடும் முன், சாலையை சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.