உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டாக்டர்கள், பணியாளர் பற்றாக்குறையால் விவசாயிகள்...  திண்டாட்டம்! கால்நடை மருந்தகங்கள் இஷ்டம்போல் திறப்பால் சிக்கல்

டாக்டர்கள், பணியாளர் பற்றாக்குறையால் விவசாயிகள்...  திண்டாட்டம்! கால்நடை மருந்தகங்கள் இஷ்டம்போல் திறப்பால் சிக்கல்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள் அலுவலக நேரத்தில் திறக்காமல், இஷ்டம்போல் திறக்கப்படுவதால், கால்நடைகளுக்கு சிகிச்சை பெற முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். டாக்டர்கள், பணியாளர்கள் என, 296 பணியிடங்களில், 100 பணியிடங்கள் காலியாக இருப்பதாலும் சிக்கல் நீடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி, அம்பத்துார் ஆகிய இடங்களில், கால்நடை துறையின் உதவி இயக்குனர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், கால்நடைகளை வளர்ந்து பராமரித்து வருகின்றனர். கடந்த, 2019 ம் ஆண்டு கால்நடைகள் கணக்கெடுப்பின்படி மாவட்டத்தில், 2.82 லட்சம் கறவை பசுக்கள் மற்றும் மாடுகள், 51,000 எருமைகள் என மொத்தம், 3.33 லட்சம் மாடுகள் உள்ளன. கட்டாயம் இவற்றிக்கு ஐந்து கால்நடை மருத்துவமனைகள், 90 கால்நடை மருந்தகங்கள், 31 கிளை நிலையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தவிர, ஆண்டுக்கு இரு முறை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால்நடை மருந்தகங்கள் காலை, 8:00- 12:00; மாலை, 3:00- 5:00 மணி வரையும் திறக்கப்படுகிறது. கிளை நிலையங்களில் காலை நேரத்தில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால்நடை மருந்தகத்திற்கு ஒரு உதவி மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவியாளர் என, மூன்று பேரும், கிளை நிலையத்திற்கு ஒரு ஆய்வாளர் வீதம் நியமிக்கப்பட்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்கள், காலை மற்றும் மாலை நேரத்தில் கட்டாயம் திறந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மருத்துவமனை, மருந்தகங்கள் மாலை நேரத்தில் திறப்பதில்லை. சில மருத்துவர்கள், ஆய்வாளர்கள் காலை நேரத்திலும் இரண்டு மணி நேரம்கூட இருப்பதில்லை. ஒத்தி வைப்பு சில மருந்தகங்களில் உதவியாளர்களே சிகிச்சை அளிக்கின்றனர். கால்நடை மருத்துவமனைகளில் 'தில்லு முல்லு' நடப்பதால் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், கால்நடைகள் இறப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 'தில்லுமுல்லு'களை தடுக்க, பிற அரசு துறையில் வருகை பதிவேட்டிற்கு பயோ- மெட்ரிக் கருவி பொருத்தியுள்ளதுபோல், கால்நடை துறையிலும் செயல்படுத்த வேண்டும் என்று, விவசாயிகள் கூறுகின்றனர். இதுதவிர, 17 மருத்துவர்கள், 30 ஆய்வாளர்கள், 45 உதவியாளர்கள் ஆகிய பணியிடங்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளன. கால்நடை துறையில் 10 ஆண்டுகளாக, ஆய்வாளர்கள், உதவியாளர்கள் பணியிடங்களை இதுவரை நிரப்பப் படவில்லை. கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு கடந்த, 2015ம் ஆண்டு காலிப்பணியிடங்கள் அறிவித்து விண்ணப்பம் பெறப்பட்டது. இதுவரை, நான்கு முறை நேர்காணல் தேதி அறிவித்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களும், காலை மற்றும் மாலையில், வேலை நேரம் வரை கட்டாயம் சிகிச்சை அளிக்க வேண்டும் என, உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்காணிக்கப்படும். பயோ - மெட்ரிக் வருகை பதிவை கொண்டு வருவது அரசின் முடிவாகும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, 10க்கும் மேற்பட்ட  மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்ந்து வருகிறேன். தடுப்பு ஊசி போடவும், மாடுகள் நோயால் பாதிக்கப்பட்டாலும், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு அழைத்து செல்வேன். ஆனால், மருத்துவர், ஆய்வாளர் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒரே மருத்துவர் இரண்டு, மூன்று மருந்தகங்களுக்கு செல்வதால், தினமும் கால்நடை மருந்தகத்தை திறப்பதில்லை. எந்த நேரத்தில் மருத்துவர் இருப்பார் என்று தெரியாமல், கால்நடை வளர்ப்போர் திண்டாடுகின்றனர். - ஜி.விஸ்வநாதன், விவசாயி. லட்சுமாபுரம். காலி இடங்கள் விபரம் பதவி, மொத்தம், காலியிடம் மருத்துவர்கள் 90 ---- 17 ஆய்வாளர் - 75 ------ 30 கால்நடை பராமரிப்பு உதவியாளர்- 120 --- 45 இரவு காவலர் 5 3 அலுவலக உதவியாளர் 6 - 5


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ