உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காவல் நிலையம் இல்லாததால் அத்திப்பட்டு புதுநகரில் அச்சம்

காவல் நிலையம் இல்லாததால் அத்திப்பட்டு புதுநகரில் அச்சம்

மீஞ்சூர்:பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், காவல் நிலையம் இல்லாததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளதுடன், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், வடசென்னை அனல்மின் நிலைங்கள், வல்லுார் அனல்மின் நிலையம் ஆகியவையும், பெட்ரோலிய நிறுவனங்கள், எரிவாயு முனையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும் செயல் படுகின்றன. அதேபோல், காட்டுப்பள்ளியில் எண்ணுார் காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம், கப்பல் கட்டும் நிறுவனம், கன்டெய்னர் முனையங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில், 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த தொழில் நிறுவனங்களில் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு, 10 - 25 கி.மீ.,யில் உள்ள மீஞ்சூர் மற்றும் காட்டூர் காவல் நிலைய போலீசார் வரவேண்டும். இதனால், குற்ற சம்பவங்களையும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளையும் உடனுக்குடன் கையாள முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களால், அவ்வப்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் கஞ்சா, புகையிலை பொருட்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. மேலும், வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து எண்ணுார் செல்லும் சாலையில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வல்லுார் முதல் காட்டுப்பள்ளி வரை கனரக வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. வடமாநில தொழிலாளர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், வழிப்பறி சம்பவங்கள், போக்குவரத்து நெரிசல், சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், அத்திப்பட்டு புதுநகரில் புதிய காவல் நிலையம் உருவாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆவடி காவல் கமிஷனரகத்தின் கட்டுப்பாட்டில், 30 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் அயப்பாக்கம், முகலிவாக்கம் ஆகிய காவல் நிலையங்கள், கடந்த மாதம் புதிதாக உருவாக்கப்பட்டன. காவல் நிலையங்களில் எல்லை பரப்பை குறைத்து, குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தி, சட்டம் - ஒழுங்கை கையாள்வதற்கு ஏதுவாக, புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்ற நடவடிக்கையாக, அத்திப்பட்டு புதுநகரில் புதிய காவல் நிலையம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை