குளம் அருகே அங்கன்வாடி தடுப்பு இல்லாததால் அச்சம்
திருவாலங்காடு, பட்டரைபெரும்புதூரில் சுற்றுச்சுவர் இல்லாத திறந்தவெளி குளத்தால், அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆபத்து உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பூண்டி ஒன்றியம், பட்டரைபெரும்புதூர் ஊராட்சி வரதாபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம், கோவில் குளத்தையொட்டி அமைந்துள்ளது. குளம் மற்றும் அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், குழந்தைகள் விளையாடும் போது குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், தற்போது வரை சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க, திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.