ஏரியில் படகை மீட்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி
பழவேற்காடு: புயலில் அடித்து செல்லப்பட்ட படகை மீட்பதற்காக சென்ற மீனவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார். பழவேற்காடு, கூனங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் தேசப்பன், 50; மீனவர். புயல் எச்சரிக்கை காரணமாக, கடந்த சில நாட்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாத நிலையில், இவரது பைபர் படகு, இஸ்ரவேல்குப்பம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புயல் ஆந்திர மாநிலத்தை கடந்த நிலையில், நேற்று காலை தேசப்பன் படகை பார்த்த போது, படகு அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. அதை மீட்பதற்காக ஏரியில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி ஏரியில் மூழ்கினார். அருகே இருந்த சக மீனவர்கள் அவரை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், தேசப்பன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.