உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நடவு பணிகளில் வெளிமாநில தொழிலாளர்கள்...தன்னானே... நானே நன்னே!: திருவள்ளூரில் மீண்டும் சூடுபிடித்த விவசாயம்

நடவு பணிகளில் வெளிமாநில தொழிலாளர்கள்...தன்னானே... நானே நன்னே!: திருவள்ளூரில் மீண்டும் சூடுபிடித்த விவசாயம்

பொன்னேரி:உள்ளூரில் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காததால், மேற்கு வங்கம், ஆந்திர மாநிலங்களில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு, பொன்னேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடவுப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நவரை, சொர்ணவாரி, சம்பா ஆகிய மூன்று பருவங்களில், 2.47 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இதில், சம்பா பருவத்தில், அதிகபட்சமாக 1.10 லட்சம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக, பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில், சம்பா பருவத்திற்கு, 45,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில், அதிக அளவில் நெல் பயிரிடப்படும் வட்டமாக பொன்னேரி உள்ளது. நடப்பாண்டு சம்பா பருவத்திற்காக. தற்போது விவசாயிகள் உழவு மற்றும் நடவுப்பணிகளை துவங்கிய நிலையில், நாற்றுகள் பறித்து, நடவுப்பணிகளை மேற்கொள்வதற்கு உள்ளூரில் ஆட்கள் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகினர். உள்ளூர் தொழிலாளர்கள் 100 நாள் பணிகளிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது பருவ மழை துவங்கியதால், குறித்த நேரத்தில் நடவுப்பணிகளை முடிக்க வேண்டிய நிலையில், அசாம், மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது 5,000க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் வந்துள்ளனர். ஒரு குழுவிற்கு, 30 பேர் என பிரிந்து, நாற்று பறிப்பது, நடவு செய்வது என, விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவும், நாளொன்றிற்கு, 5 - 6 ஏக்கர் வரை நடவுப்பணிகளை மேற்கொள்கிறது. இதற்காக, 1 ஏக்கருக்கு 4,500 ரூபாய் கூலி பெறுகின்றனர். இவர்கள், பணி செய்யும் கிராமங்களில் உள்ள கோவில், நெல் கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் தங்குகின்றனர். உள்ளூரில் பணியாட்கள் கிடைக்காத நிலையில், வெளிமாநில தொழிலாளர்களின் வருகை பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள் இல்லையெனில் சிரமம் தான் பணியாட்கள் கிடைக்காத நிலையில், விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பயிரிடுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சொர்ணவாரி பருவத்தில் பயிரிட்டு, உடனடியாக சம்பா பருவத்திற்கு தயாராக, நாற்றங்கால் நடவுமுறை தான் பயனளிக்கும். உள்ளூரில் விவசாய பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அதிக பணிச்சுமை இல்லாத 100 நாள் வேலையையே அவர்கள் விரும்புகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள் ஆர்வமுடனும், நேர்த்தியாகவும் பணிகளை செய்கின்றனர். அவர்கள் இல்லையென்றால், திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்வதே சிரமம் தான்.- பி.ஜி.கணபதி, விவசாயி, பொன்னேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

lana
அக் 06, 2025 11:03

தமிழன் என்று சொல்லடா டாஸ்மாக் சரக்கு அடித்து நில்லடா. தமிழன் என்று ஒரு இனமுண்டு தனியே அவனுக்கு ஒரு இலவசம் உண்டு. உழைத்து பிழைப்பது கடினம் கேவலமாக என்னும் ஒரு இனம் வரலாற்றில் முன்னேறிய சரித்திரம் இல்லை


Anantharaman
அக் 06, 2025 08:19

உள்ளூர் தொழிலாளிகள் கிடைக்காததால் காரணம், அவர்கள் எல்லாரும் டாஸ்மாக் வாடிக்கையாளர். நாள் முழுதும் பிஸி. திமுக ஆட்சியின் கைங்கர்யம். அடுத்து வெளி மாநில ஊழியர்களைக் கரித்துக் கொட்டுவது பாக்கி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை