மழைநீர் சூழ்ந்த அரசு கட்டடங்கள் வரதராஜபுரம் பகுதிவாசிகள் அவதி
திருமழிசை:திருமழிசை பேரூராட்சி அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சி. சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையோரம் இந்த ஊராட்சிக்குட்பட்ட கிளை நுாலகம், கிராம நிர்வாக அலுவலகம், கிராம இ - சேவை மையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற அரசு கட்டடங்கள் உள்ளன.கடந்த மாதம் பெய்த மழையால் அரசு கட்டடங்கள் மழைநீர் சூழ்ந்து குளம்போல் மாறியது. இதனால் பகுதிவாசிகள், கிளை நுாலகம், கிராம சேவை மையம் போன்ற அரசு கட்டடங்களுக்கு வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.குளம்போல் தேங்கியுள்ள மழைநீர், தற்போது கழவுநீராக மாறி அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. ஒரு மாதமாகியும் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் பகுதிவாசிகள் கிளை நுாலகம், கிராம நிர்வாக அலுவலகம், கிராம இ - சேவை மையம் போன்ற அரசு கட்டடங்களுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும், கழிவுநீர் சூழ்ந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் குடிநீரால் பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட பூந்தமல்லி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவுநீரை அகற்றவும் வரும்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரதராஜபுரம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.