உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி அருகே பயணியருடன் அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து

பொன்னேரி அருகே பயணியருடன் அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து

பொன்னேரி:பொன்னேரி அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தொங்கிய பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் குறைந்த பயணியர் மட்டுமே இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து பணிமனையில் இருந்து, பொன்னேரி - தத்தமஞ்சி - மீஞ்சூர் வழித்தடத்தில், தடம் எண்: டி40 அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று காலை பொன்னேரியில் இருந்து தத்தமஞ்சி வழியாக மீஞ்சூர் சென்றடைந்தது. பின், அதே வழித்தடத்தில் மீண்டும் பொன்னேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தது. காட்டூர் அடுத்த தத்தமஞ்சி அருகே ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வளைவில் திரும்ப முடியாமல் ஒரு அடி உயர தடுப்புச்சுவரில் மோதியது. தடுப்புச்சுவரை உடைத்து, பேருந்து முன்பக்க சக்கரங்கள் வயல்வெளி பகுதியில் அந்தரத்தில் தொங்கியது. குறைந்த வேகத்தில் பேருந்து இயக்கப்பட்டதால், பள்ளத்தில் விழாமல் சிக்கி கொண்டது. பீதியடைந்த பயணியர், அலறியடித்து கீழே குதித்தனர். பேருந்தில் குறைந்த பயணியர் மட்டுமே இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து காட்டூர் போலீசார் மற்றும் பொன்னேரி பணிமனை ஊழியர்கள் அங்கு விரைந்து, கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பேருந்தின் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய பேருந்து, கடந்த 40 ஆண்டுகளாக இயக்கப்படுவதாகவும் பராமரிப்பு படுமோசமாக உள்ளதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி