ஒற்றையடி பாதைகளாக தெருச்சாலை கூடுவாஞ்சேரி கிராமவாசிகள் தவிப்பு
பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி கிராமத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி காலனி பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தெருச்சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன.தெருச்சாலைகள் முழுதும் செடிகள் வளர்ந்து புதர்மண்டியும், ஒற்றையடி பாதைகளாகவும் உள்ளன. இதனால், குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என, கிராமவாசிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:தற்போது வரை எங்கள் பகுதியில் தெருச்சாலைகள் அமைக்கவில்லை. இந்த சாலைகளை சீரமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன், 2.75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், சாலை சீரமைப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறது. ஆதிதிராவிடர் பகுதி என்பதால், நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்.மழைக்காலத்தில் தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. எனவே, மாவட்டம் நிர்வாகம் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.