முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் பட்டா கேட்டு மனு
திருவள்ளூர், அரசு வழங்கிய விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க கோரி, இரண்டாம் உலகப் போரில் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். இரண்டாம் உலகப் போரில் பணிபுரிந்த ராணுவ வீரர்களுக்கு, திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் கிராமத்தில், 6 ஏக்கர் விவசாய நிலம் பரிசாக வழங்கப்பட்டது. தற்போது அங்கு, 75 ஆண்டுகளுக்கும் மேலாக, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில், 53 பேருக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு பட்டா வழங்காமல் விடு பட்டுள்ளது. மேலும், விவசாய நிலத்தை பெற்றவர்களுக்கு, இதுவரை பட்டா வழங்காமல் உள்ளது. இதையடுத்து, கூடப்பாக்கம் முன்னாள் ராணுவ குடியிருப்போர் நலச்சங்கத்தினர் நேற்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். பின் அவர்கள் கூறியதாவது: இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றோருக்கு, எவ்வித ஓய்வூதியம், வாரிசுதாரர் பணி போன்ற சலுகை கிடையாது. இடம் மட்டுமே பரிசாக வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வேறு சலுகை இல்லாத நிலையில், பட்டா வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பட்டா கிடைக்கவில்லை. எனவே, விவசாய நிலத்திற்கான பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.