தரமற்ற எம்.சாண்ட் வினியோகம் வீடு கட்டுவோர் அதிருப்தி
திருவாலங்காடு:கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தரமான எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொறியாளர்கள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுமானத்திற்கு முக்கிய தேவையாக மணல் உள்ளது. தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்றில் மணல் எடுப்பது தடை செய்யப்பட்ட நிலையில், எம்.சாண்ட் மற்றும் பி.சாண்டை பயன்படுத்தும் சூழல் உள்ளது. பி.சாண்ட் என்பது பிளாஸ்டரிங் வேலைக்காக பயன்படுத்துவது. இது, எம்.சாண்ட் போல் இல்லாமல் மிகவும் மெல்லியதாக இருக்கும். எம்.சாண்ட் என்பது உற்பத்தி செய்யப்படும் மணல். இது, பி.சாண்டை விட சற்று தடிமனாக இருக்கும். திருவாலங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த ஆண்டுகளில் சாதாரணமாக வீடு கட்ட சதுர அடிக்கு 2,000 ரூபாய் வீதம் பெற்று வந்தனர். தற்போது, 2,200 - 2,500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும், 6 யூனிட் எம்.சாண்ட் மணல், 36,000 ரூபாய்க்கும், பி.சாண்ட் 38,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தற்போது, விற்பனை செய்யப்படும் எம்.சாண்டுடன் கலப்படம் அதிகம் உள்ளதால், கட்டுமான பொறியாளர்கள் மற்றும் வீடு கட்டும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், ஒரு சில கட்டுமானங்களின் பூச்சுகளில் சேதமடைந்து வருகிறது. எனவே, கலப்படம் இல்லாத எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் மணல் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், கட்டட பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.