மனைவியுடன் கள்ளத்தொடர்பு பிளம்பரை கொன்ற கணவர் சரண்
துரைப்பாக்கம்;மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பிளம்பருக்கு, மது வாங்கி கொடுத்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் போலீசில் சரண் அடைந்தார். பெருங்குடி, திரு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் அன்புகணபதி, 28. பிளம்பர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை, 30, என்ற ஆட்டோ ஓட்டுநரின் மனைவி மதுவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து உள்ளது. நேற்று முன்தினம், இருதரப்பு குடும்பத்தினர் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், இனிமேல் மதுவுடன் பேசக்கூடாது என, அன்புகணபதியை கண்டித்து அனுப்பினர். அனைவரும் கலைந்து சென்ற நிலையில், ராஜதுரை வீட்டுக்கு சென்றார். அங்கு, மனைவி மதுவுடன் தகராறு ஏற்பட்டது. இதில், கோபமடைந்த மது, வீட்டைவிட்டு வெளியேறினார். இவ்வளவு பிரச்னைக்கும் காரணம் அன்புகணபதி தான்; அவரை தீர்த்துக் கட்டவேண்டும் என, ராஜதுரை திட்ட மிட்டார். அதனால், 'நடந்த அனைத்தையும் மறந்து விட்டேன்; மது அருந்தலாம் வா' என, அன்புகணபதியை, ராஜதுரை அன்பாக பேசி நேற்று இரவு அழைத்து சென்றார். பெருங்குடி ரயில் நிலையம் அருகே, இருவரும் அமர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கேறியதும், கள்ளத்தொடர்பு தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜதுரை, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அன்புகண பதியின் கழுத்து, மார்பு பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். பலத்த காயத்துடன் இருந்த அன்புகணபதியை, உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்தார். வழக்கு பதிந்த துரைப்பாக்கம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதே காவல் நிலையத்தில் சரண் அடைந்த ராஜதுரையிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.