இலுப்பூர் மேல்நிலை தொட்டி பராமரிப்பின்றி சீரழியும் அவலம்
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், இலுப்பூர் ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையம் அருகே, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வாயிலாக, குடிநீர் வினியாகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த குடிநீர் தொட்டி, கடந்த 2012 - 13ம் ஆண்டு, ஊரக வளர்ச்சி கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ், 53,000 ரூபாய் மதிப்பீட்டில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதன்பின், கடந்த 11 ஆண்டுகளாக, எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், பராமரிப்பில்லாததால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் செடிகள் வளர்ந்து, பல இடங்களில் விரிசலடைந்து உள்ளது.தொட்டியை சுத்தம் செய்யாமலேயே குடிநீர் வழங்கப்படுவதாகவும், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, இலுப்பூர் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.