100 நாள் வேலை திட்டத்தில் குளம் வெட்டியது மனித சக்தியா, இயந்திர சக்தியா விசாரணை
திருவாலங்காடு: காவேரிராஜபுரத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி 100 நாள் வேலை திட்ட பணியில் குளம் வெட்டியது மனித சக்தியா, இயந்திர சக்தியா என, தேசிய ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது காவேரிராஜபுரம் கிராமம். இங்கு 2024ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 8.10 லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் வெட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தில் 100 நாள் பணியாளர்களை கொண்டு பணி செய்ய வேண்டும். ஆனால் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் குளம் வெட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று தேசிய ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலர்கள் விசாரணை நடத்தினர். குளம் பொக்லைன் இயந்திரம் வாயிலாக வெட்டப்பட்டதா அல்லது 100 நாள் பணியாளர்களை கொண்டு வெட்டப்பட்டதா என, ஆய்வு செய்தனர். தொடர்ந்து பணியாளர்களை வரவழைத்து அவர்களிடம் விசாரித்தனர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'விசாரணை நடத்தியுள்ளோம். திருவள்ளூர் கலெக்டரிடம் அறிக்கை சமர்பிக்க உள்ளோம்' என்றனர்.