பள்ளி, கல்லுாரி விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படும் 35 மாணவ - மாணவியர் விடுதியில், நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.பள்ளி விடுதிகளில் நான்கு முதல் பிளஸ் 2 வரை மற்றும் கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.ஐ.டி., பாலிடெக்னிக் படிப்பகளில் பயிலும் மாணவ - மாணவியர் சேரலாம். அனைவருக்கும் உணவு மற்றும் தங்கும் வசதியும், சீருடை, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கான வினா வங்கி நுால்கள், சிறப்பு வழிகாட்டி மற்றும் பாடவாரியான வினா வங்கி நுால்கள் வழங்கப்படும். மேலும், பாய், போர்வை வழங்கப்படும்.விடுதிகளில் சேரும் மாணவ - மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடையோர், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பள்ளி மாணவர்கள், 18ம் தேதிக்குள்ளும், கல்லுாரி மாணவர்கள் ஜூலை 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஒவ்வொறு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியாக ஐந்து இடங்கள் ஏற்படுத்தபட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.