அர்ச்சகர் வீட்டில் ரூ.2 லட்சம் பொருட்கள் திருட்டு
திருவாலங்காடு:கோவில் அர்ச்சகர் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை கிராமம் மணியக்கார தெருவில் வசிப்பவர் மணி, 45. உளுந்தை கிராமத்திலுள்ள பெருமாள் கோவிலில், அர்ச்சகராக உள்ளார். இவர். நேற்று முன்தினம் மனைவி, குழந்தையுடன் கோவிலுக்குச் சென்று, மாலை 6:00 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்ற போது, உள்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 30,000 ரூபாய், வெள்ளி குத்துவிளக்கு, ஸ்பூன் மற்றும் தங்க மோதிரம், பிரேஸ்லெட் என, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து மணி அளித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.