கட்டி முடிக்கப்பட்டு 16 மாதமாச்சு! கோசாலை திறக்காததால் வேதனை
திருவாலங்காடு:திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள கோசாலை, 16 மாதமாக திறக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் கோசாலை அமைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, பக்தர்கள் காணிக்கையாக பசுக்களை கொடுத்தாலும், அதை பராமரிக்கும் அளவுக்கு இடவசதி இல்லாததால், பல்வேறு காரணங்களை கூறி, கோவில் நிர்வாகம் பசுக்களை வாங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. மழைக்காலத்தில் கோசாலை அமைக்கப்பட்டு உள்ள இடம் சகதியாக காட்சியளிப்பதுடன், மாட்டுச்சாணத்துடன் சேர்ந்து கோவில் வளாகம் முழுதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், பக்தர்கள் வேதனை அடைந்து வந்தனர். எனவே, மாற்று இடத்தில் கோசாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தெற்கு மாட வீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் கோசாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி துவங்கியது. கட்டட பணி முடிந்து 16 மாதமாகியும், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராததால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, கோசாலையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர, திருத்தணி கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.