காட்டூர் - தத்தமஞ்சி ஏரிகள் நீர்த்தேக்கமாகியும்... பயனில்லை: வறண்டு கிடப்பதால் 62 கோடி ரூபாய் வீணடிப்பு
பொன்னேரி,:காட்டூர் - தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து, நீர்த்தேக்கமாக மாற்றிய நிலையில், திட்டமிட்ட முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்காததால், தற்போது ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காட்டூரில் 362 ஏக்கர், தத்தமஞ்சி கிராமத்தில் 252 ஏக்கர் என, நீர்வளத் துறையின் இரண்டு பாசன ஏரிகள் அருகருகே அமைந்துள்ளன. ஏரிகளில் தேங்கும் தண்ணீரை கொண்டு காட்டூர், தத்தமஞ்சி, அத்தமஞ்சேரி, சோமஞ்சேரி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 1,730 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இரு ஏரிகளுக்கும், ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து, கால்வாய் வழியாக மழைநீர் கொண்டு வந்து சேமித்து வைக்கப்படுகிறது. இவற்றின் கொள்ளளவு, 0.0053 டி.எம்.சி.,யாக இருந்தது. இது, விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை. மேற்கண்ட கிராமங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஏரிநீரை நம்பி விவசாயம் செய்கின்றனர். ஏரிகளில் கூடுதல் தண்ணீர் சேமித்து வைத்தால் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படும் என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த இரு ஏரிகளையும், சிறு நீர்த்தேக்கமாக மாற்ற திட்டமிட்டு, 2020ல், 62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. உடனடியாக பணிகள் துவக்கப்பட்டு, இரு ஏரிகளை சுற்றிலும், 9.3 கி.மீ., தொலைவிற்கு, 5 மீ., உயரத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டன. ஏரிகளில் இருந்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக, 11 இடங்களில் கிணறு மதகுகள் அமைக்கப்பட்டன. ஆரணி ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களும் துார்வாரி புதுப்பிக்கப்பட்டன. காட்டூர் ஏரியின் உள்வாய் பகுதியில் இருந்த ஷட்டர்கள் மாற்றப்பட்டு, புதிதாக பொருத்தப்பட்டன. கரைகளை உயர்த்துதல், பலப்படுத்துதல், மதகு கிணறுகள் அமைத்தல், கலங்கல் பகுதிகளில் ஷட்டர்களுடன் தடுப்புச்சுவர் அமைத்தல் என, நீர்த்தேக்கத்திற்காக பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள், 2023ல் நிறைவு பெற்றன. இதனால், இரு ஏரிகளிலும், 0.35 டி.எம்.சி., தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டது. இது, ஏற்கனவே இருந்த கொள்ளளவை விட, 0.30 டி.எம்.சி., அதிகம். இதன் வாயிலாக ஏரிகளை சுற்றியுள்ள கிராமங்களின் விவசாயத்திற்கு தேவையான பாசன வசதி பூர்த்தியாகும் எனக் கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்ட கொள்ளள விற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படவில்லை. இரு ஏரிகளிலும், 0.10 - 0.15 டி.எம்.சி., தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், ஏரிகள் கோடைக்கு முன்பே வறண்டு, பழைய நிலையே தொடர்கிறது. இரு ஏரிகளும் நீர்த்தேக்கமாக மாற்றுவதற்காக செலவிட்ட, 62 கோடி ரூபாய் நிதியும் வீணாகியுள்ளது. மேலும், ஏரியின் கலங்கல், கிணறு மதகுகள் பராமரிப்பின்றி உள்ளன. நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரிகளை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் விவசாயத்திற்கு மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டும், முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் உள்ளது. இது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. தொடர் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பும் இல்லை. கண்துடைப்பிற்காக திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நடப்பாண்டு பருவமழைக்காவது, திட்டமிட்ட கொள்ளளவிற்கு ம ழைநீரை சேமித்து வைக்க, நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். - சமூக ஆர்வலர்கள் பொன்னேரி.