உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் கிருத்திகை விழா 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணியில் கிருத்திகை விழா 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி, நவ. 17--திருத்தணி முருகன் கோவிலில், நேற்று கார்த்திகை மாத முதல் கிருத்திகை விழா ஒட்டி மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம், பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபணரங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, உற்சவர் முருகர் தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை, 5:30 மணி முதலே பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். நண்பகல், 11:00 மணி முதல் மதியம், 2:30 மணி வரை தொடர்ந்து திருத்தணி நகரம் மற்றும் மலைக்கோவிலில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.கொட்டும் மழையிலும் பக்தர்கள், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம்

சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் நேற்று காலை, 10:45 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜி.ஆர்.டி., ேஹாட்டலுக்கு வந்து இறங்கினார். பின் கார் மூலம், நண்பகல், 11:10 மணிக்கு திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார். கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு ஆகியோர் வரவேற்றனர். பின், ஆபத்சகாய விநாயகர், சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகப்பெருமான் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டார். அமைச்சருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ