திரவுபதியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருத்தணி:திருத்தணி, காந்தி நகர் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு பின், கடந்த 7ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.இதற்காக, கோவில் வளாகத்தில் ஏழு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் மற்றும் கலச பூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு முதற்கால பூஜை மற்றும் மஹா பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் காலையில், இரண்டாம் கால பூஜையும், மாலையில், மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடந்தது.நேற்று, காலை 7:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 8:30 மணிக்கு கலச ஊர்வலம் நடந்தது. பின், காலை, 9:00 மணிக்கு கோவில் கோபுர விமானத்தின் மீதும், மூலவர் மீது கலசநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.அதே நேரத்தில் திரவுபதியம்மன் கோவில் அருகே உள்ள துர்க்கையம்மன் கோவில் விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர் திருத்தணி பூபதி, நகராட்சி முன்னாள் தலைவர் சவுந்தர்ராஜன் உட்பட திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர். மேலும், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில், 1,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.இரவு 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.