குஜராத், சத்தீஸ்கரிலிருந்து வண்டலுார் பூங்காவிற்கு சிங்கம் * கோடை விடுமுறையில் மக்கள் பார்த்து ரசிக்க வாய்ப்பு
தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், மக்களுக்கு காட்சிப்படுத்தும், 'லயன் சபாரி'க்காக குஜராத், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து, புதிதாக ஆறு சிங்கங்கள் வரவழைக்கப்பட உள்ளது. அதற்கு பதிலாக, இங்கிருந்து சில விலங்குகள், அங்குள்ள பூங்காக்களுக்கு அனுப்பப்பட உள்ளது.வண்டலுார் உயிரியல் பூங்காவில், பாலுாட்டிகள், ஊர்வனங்கள், பறவைகள், ஊன் உண்ணிகள் என, எட்டு வகையான, 2,400 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.இங்குள்ள விலங்குகளை காண வரும் பார்வையாளர்களை கவரும் விதமாக, 'லயன் சபாரி' உள்ளது. தற்போது, 11 சிங்கங்கள் உள்ளன. இதில், லயன் சபாரியில் ஏழு சிங்கங்களும், கூண்டில் மூன்று சிங்கங்களும் விடப்பட்டுள்ளன.வண்டலுார் பூங்காவில் உள்ள, 20 வயதான வீரா என்ற ஆண் சிங்கம், வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. பூங்கா மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளித்தாலும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.இந்நிலையில், கோடை விடுமுறைக்கு ஏராளமானோர் பூங்காவிற்கு வருவர். அவர்களை கவருவதற்காக, மேலும் சில சிங்கங்களை வாங்கி, லயன் சபாரியை அதிகப்படுத்த, வண்டலுார் பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.அதற்காக, குஜராத்தில் இருந்து மூன்று சிங்கங்கள், சத்தீஸ்கரில் இருந்து மூன்று சிங்கங்கள் என, ஆறு சிங்கங்களை கொண்டுவர, திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.மேலும், குஜராத்தில் இருந்து ஒரு பெண் காட்டு கழுதை வாங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கு பதிலாக, குஜராத் பூங்காவிற்கு ஒரு ஜோடி வெள்ளைப் புலி, சத்தீஸ்கர் பூங்காவிற்கு ஒரு ஜோடி காட்டுமாடு, மூன்று சருகு மான்கள், இரண்டு பெண் ஓநாய்கள், வண்டலுார் பூங்காவில் இருந்து அனுப்பப்பட உள்ளன.விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின்கீழ், காண்டாமிருகம் உள்ளிட்ட பல அரிய விலங்குகள், வண்டலுாருக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு பதில், இங்கிருந்து அதிக எண்ணிக்கையிலான விலங்குகள், மற்ற பூங்காக்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன.விலங்கு நல ஆர்வலர்கள் கூறியதாவது:தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்காவான வண்டலுாரில், வரிக்குதிரை இல்லை. இங்கிருந்த 'டீனா' என்ற, 18 வயது பெண் வரிக்குதிரை, உடல்நலம் பாதிக்கப்பட்டு, 2022, மே மாதம் இறந்தது. அதன் பின், வரிக்குதிரை கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது.இந்த விலங்குகள், கொல்கட்டா மற்றும் பாட்னா பூங்காவில் அதிகம் உள்ளன. அங்கிருந்து விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் அவற்றை கொண்டுவர, நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.ஆனால், அந்த நிர்வாகங்கள், அதிக எண்ணிக்கையில் விலங்குகளை கேட்பதால், அத்திட்டம் கிடப்பிலேயே உள்ளது.அதேபோல், 'ஆயிஷா' என்ற, 28 வயது பெண் ஒட்டகச்சிவிங்கி மட்டுமே, பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஜோடியாக, ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கி கொண்டுவர வேண்டும்.இவ்விஷயத்தில், மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் தலையிட்டு, ஆண் ஒட்டகச்சிவிங்கி மற்றும் வரிக்குதிரை கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.கோடை விடுமுறைக்கு முன், பார்வையாளர்களுக்காக சிங்கங்கள் மற்றும் பிற விலங்குகளை அழைத்து வந்துவிட்டால் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கை கொடுக்கும் திட்டம்
விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில், பல விலங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக, 2024, ஜனவரியில், உ.பி., மாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து, 10 அனுமன் குரங்குகள் எடுத்து வரப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், லக்னோ மற்றும் பெங்களூருவில் இருந்து தலா, ஒரு சிங்கம் கொண்டுவரப்பட்டது. அதேபோல், ஹைதரபாத், பாட்னாவில் இருந்து காண்டாமிருகங்கள் கொண்டுவரப்பட்டன.
வழிகாட்டும் வண்டலுார்
காட்டுமாடு, நீலமான், வெள்ளைப்புலி, நெருப்புக்கோழி இனப்பெருக்கத்தில், நாட்டில் உள்ள மற்ற பூங்காக்களுக்கு, வண்டலுார் பூங்கா எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதன் காரணமாக, சில ஆண்டுகளாக இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய கணக்கெடுப்பின்படி, காட்டுமாடு - 40, நீலமான் - 50, புலி - 20, நெருப்புக்கோழி - 50க்கும் அதிகம் என்ற எண்ணிக்கையில் உள்ளன.