நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்திய வாகனங்களுக்கு பூட்டு
பொன்னேரி:பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் புறநகர் ரயில்களில் பயணிக்கின்றனர்.பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, இருசக்கர வாகனங்களில் வரும் பயணியர் அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் அவற்றை நிறுத்துவிட்டு செல்கின்றனர்.இங்கு பைக்குகளுக்கு, 250ரூபாயும், சைக்கிளுக்கு, 150 ரூபாயும் மாத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு சிலர் பயணியர், கட்டணத்தை தவிர்ப்பதற்காகவும், அவசரமாக ரயிலை பிடிக்கும் நோக்கத்திலும், ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதி மற்றும் வேண்பாக்கம் செல்லும் சாலையின் ஓரங்களில் வரிசையாக நிறுத்துவிட்டு செல்கின்றனர்.ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் நிறுத்தப்படுவதால், பயணியர் ரயில் நிலையத்திற்குள் சென்று வரும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இங்கு இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது என ரயில்வே நிர்வாகம் எச்சரித்து, 'நோ பார்க்கிங்' பலகையும் வைத்து உள்ளது. அதையும் மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.வெளிவளாகங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. கடந்த, மூன்று மாதங்களில், 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடுபோயுள்ளன.தொடர் புகார்களை தொடர்ந்து, கடந்த சில தினங்களாக பொன்னேரி போலீசார் அங்கு தினமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், 'நோ பார்க்கிங்' பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை கயிறு கொண்டு ஒன்றாக இணைத்து பூட்டு போட்டனர்.வாகனங்களை எடுக்க வந்த உரிமையாளர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர், ' வாகனங்களை இங்கு நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும்' என எச்சரித்து அவற்றை விடுவித்தனர்.