மெதுார் பூங்காவில் மாயமான விளையாட்டு உபகரணங்கள்
பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம் மெதுார் ஊராட்சிக்கு உட்பட்ட அரசூர் சாலையில், கடந்த 2019ல், 40 லட்சம் ரூபாய் செலவில், சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.இங்கு நடைபயிற்சி செய்வதற்கான பாதை, ஓய்வு எடுக்க இருக்கைகள், சிறுவர்களுக்கான ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டன.இளைஞர்களுக்கு பல்வேறு உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால், திட்டம் பயனுக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் முடங்கியது.பூங்கா முழுதும் செடி, கொடிகள் வளர்ந்தும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியதாலும் கிராமவாசிகள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பூங்காவிற்கு செல்வதை தவிர்த்தனர். மக்களின் பயன்பாடு இல்லாததால், சமூக விரோதிகளின் கூடரமாக மாறியது. விளையாட்டு சாதனங்களும் துருப்பிடித்தன.சில நாட்களில் சேதமடைந்த பொருட்கள் மாயமாகின. உடற்பயிற்சி கூடத்தில் இருந்த உபகரணங்களும் ஒவ்வொன்றாக மாயமாகி வந்தன. பூங்காவில் இருந்த விளையாட்டு சாதனங்கள், சுற்றுச்சுவரில் பொருத்தப்பட்டிருந்த கிரில்கள் உடைத்து எடுக்கப்பட்டுள்ளன.பூங்காவில் பெரும்பாலன பொருட்கள் மாயமாகி வருவது குறித்து, ஒன்றிய நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர். எனவே, பூங்காவை சீரமைத்து, தேவையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்களை பொருத்த ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.