உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் 18 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் விறுவிறு

திருத்தணியில் 18 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் விறுவிறு

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில், 35 அரசு உயர்நிலைப் பள்ளி, 22 அரசு மேல்நிலைப் பள்ளி என, மொத்தம், 57 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், பெரும்பாலான பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் அதிகளவில் இருந்தன.இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிந்துரையின்படி, முதற்கட்டமாக, 18 அரசு பள்ளிகள் பராமரிப்பு மற்றும் போதிய வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம், 1.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.தற்போது, பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் மாணவர்களுக்கு அடிப்படை வசதி பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.இது குறித்து திருத்தணி பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் பராமரிப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வருவாய் கோட்டத்தில், திருத்தணி, முருக்கம்பட்டு, அருங்குளம், நெமிலி, அமிர்தாபுரம் உட்பட மொத்தம், 18 அரசு உயர்நிலை, மேல்பள்ளிகளில், நுாலகம், ஆய்வகம், வகுப்பறைகள், தரைத்தளம், கழிப்பறை, கதவு, ஜன்னல் மற்றும் பள்ளிக்கு சுற்றச்சுவர் அமைத்தல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இப்பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. வரும், பிப்ரவரி மாதத்திற்குள், 18 பள்ளிகளிலும் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி, மாணவர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ