உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரட்டிப்பு பண ஆசைகாட்டி ரூ.62 லட்சம் மோசடி செய்தவர் கைது

இரட்டிப்பு பண ஆசைகாட்டி ரூ.62 லட்சம் மோசடி செய்தவர் கைது

திருவள்ளூர்;பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்குமென ஆசைவார்த்தை கூறி, 62 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 30-; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அபிராமி, 24. ராஜேஷிடம், சக ஊழியர்களான சாலமங்கலத்தைச் சேர்ந்த விக்னேஷ்- - சிந்தியா தம்பதி மற்றும் உறவினர் சங்கீதா ஆகியோர், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதையடுத்து, 2024 ஆண்டில் 12 தவணைகளாக 62 லட்சம் ரூபாய் வரை பெற்றனர். துவக்கத்தில் லாபம் கிடைத்ததாக, 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால், அதன்பின் பணம் தரவில்லை. இதுதொடர்பாக அவர்களிடம் கேட்ட போது, ராஷேசுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால், மன உளைச்சல் அடைந்த அவரது மனைவி அபிராமி, விக்னேஷ் உட்பட மூவர் மீதும், கடந்த ஜன., மாதம் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் முறையாக விசாரிக்காததால், அபிராமி தற்கொலைக்கு முயன்றார். அவரது தாய் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின், நலமுடன் வீடு திரும்பினார். இதையடுத்து, 'குற்றப்பிரிவு போலீசார் முறையாக விசாரிக்கவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மே மாதம் அபி ராமி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது. விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், கன்னியாகுமரியில் பதுங்கியிருந்த விக்னேஷை கைது செய்து, நேற்று முன்தினம் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ