உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு கைதானவர் சிறையில் அடைப்பு

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு கைதானவர் சிறையில் அடைப்பு

திருவள்ளூர், திருவள்ளூர் அருகே பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில குற்றவாளி ராஜீ பிஸ்வகர்மா, நான்கு நாள் காவலில் விசாரணைக்கு பின், நேற்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுமி, கடந்த 12ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீ பிஸ்வகர்மாவை, கடந்த 25ம் தேதி போலீசார் கைது செய்தனர். கடந்த 26ம் தேதி திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன் ஆஜர்படுத்தப் பட்டு, ஆக., 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 28ம் தேதி ராஜீ பிஸ்வகர்மாவை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிபதி உமா மகேஸ்வரியிடம் ஆரம்பாக்கம் போலீசார் மனு அளித்தனர். கடந்த 29ம் தேதி திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், நீதிபதி உமா மகேஸ்வரி, நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டதையடுத்து, ஆரம்பாக்கம் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். நேற்று திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில், ராஜீ பிஸ்வகர்மாவை ஆஜர்படுத்திய ஆரம்பாக்கம் போலீசார், நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவின்படி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !