கடம்பத்துாரில் நிழற்குடைகளை மறைத்து வைக்கப்பட்டு வரும் மெகா பேனர்கள்
கடம்பத்துார்:சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கடம்பத்துார் ஒன்றியத்தில், கடம்பத்துார், பேரம்பாக்கம், மணவாள நகர், கொண்டஞ்சேரி, மப்பேடு, கீழ்நல்லாத்துார், மேல்நல்லாத்துார் உட்பட பல இடங்களில் திருமணம், பிறந்தநாள், நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், கடம்பத்துார் தனியார் திருமண மண்டபத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில், திருவள்ளூர் சட்டசபை தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.அதற்காக, தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், கொண்டஞ்சேரி பயணியர் நிழற்குடையை மறைத்து விளம்பர பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.அதேபோல, திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில், பிரையாங்குப்பம் பயணியர் நிழற்குடை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிக்காக விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.இதனால் பகுதிவாசிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், இந்த விளம்பர பேனர்கள் நிகழ்ச்சி முடிந்து அகற்றப்படாமல் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, பேனர் வைப்பது மற்றும் கொடி கம்பங்கள் கட்டுவதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கடம்பத்துார் போலீசார் கூறுகையில், ''தனியார் திருமண மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பேனர்கள் வைப்பது குறித்து கடிதம் கொடுத்துள்ளனர்,'' என தெரிவித்தனர்.