சாலையோரம் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பொன்னேரி:பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து, அனுப்பம்பட்டு, தேவதானம், வேலுார் வழியாக திருவெள்ளவாயல் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம், இலவம்பேடு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், அவற்றை வெளியேற்றுவதற்காக இச்சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டன.மழைநீர் வெளியேற்றுவதற்காக சாலையோரம் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில், அங்கு எந்தவொரு எச்சரிக்கைபதாகையும் வைக்கப்படவில்லை.இதனால், அப்பகுதியில் சாலை குறுகலாக மாறியுள்ளது. இதனால், வாகனங்கள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன. எதிரெதிரே வாகனங்கள் அப்பகுதியை கடக்கும்போது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.ஒவ்வொரு மழைக்கும் சாலையை வெட்டி சேதப்படுத்தி, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்த்து, மழைநீர் செல்வதற்கு தேவையான நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.