அடிக்கடி நெடுஞ்சாலை சேதம் அச்சுறுத்தும் மெகா பள்ளங்கள்
கும்மிடிப்பூண்டி:அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால், குருவராஜகண்டிகை - சிறுபுழல்பேட்டை நெடுஞ்சாலை அடிக்கடி சேதமடைந்து, 'மெகா' பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், குருவராஜகண்டிகை சந்திப்பில் இருந்து சிறுபுழல்பேட்டை கிராமத்தை இணைக்கும், 4 கி.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது. இச்சாலை வழியாக குருவராஜகண்டிகை மற்றும் சிறுபுழல்பேட்டை கிராமங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால், அடிக்கடி சாலை சேதமடைகிறது. குறிப்பாக, இச்சாலையில் உள்ள அனைத்து வளைவுகளிலும் 'மெகா' பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதை கடக்கும் லாரிகள் தடுமாற்றம் அடைவதுடன், அடிக்கடி லாரிகளின் அச்சு முறிவதாக கூறப்படுகிறது. இதனால், இச்சாலையை அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலையில், கனரக வாகன ஓட்டிகள் உள்ளனர். எனவே, இச்சாலை அடிக்கடி சேதமடைவதை தடுக்க, வாகன போக்குவரத்துக்கு ஏற்ப சாலையை புதுப்பிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.