திருத்தணி அரசு மருத்துவமனையில் அதிகாரிகளுக்கு எ ம்.எல்.ஏ., டோஸ்
திருத்தணி;திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ., சந்திரன், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை கடித்துக் கொண்டார். திருத்தணியில் புதிதாக திறக்கப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மின்துாக்கி இயங்கவில்லை. அங்குள்ள கழிப்பறைகள் சுத்தமாக இல்லை உட்பட பல்வேறு பிரச்னைகளால், தினமும் நோயாளிகள் கடும் சிரமப்படுகின்றனர் என, நம் நாளிதழில் படத்துடன் இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. நேற்று திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனை சுத்தமாக இல்லாததை கண்டு, எம்.எல்.ஏ. முகம்சுளித்தார். மேலும், நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளை பார்த்த போது அசுத்தமாக இருந்தது. ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., மருத்துவ மனையின் தலைமை மருத்துவர், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை கண்டித்தார். பின், 'உங்கள் வீட்டில் அசுத்தமாக இருந்தால், கழிப்பறையை பயன்படுத்துவீர்களா' என, கடிந்து கொண்டார். இதை, 'மருத்துவமனை அலுவலர்கள் ஏன் கண்காணிப்பதில்லை' எனவும் கடிந்து கொண்டார். பின், தரைத்தளத்தில் மின்துாக்கி இருந்த பகுதியை பார்த்த போது, இரண்டில் ஒரு மின்துாக்கி மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. பின், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், 'மருத்துவமனை திறந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இரண்டு மின்துாக்கிகள் ஏன் இயக்கவில்லை' என கண்டித்தார். 'அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவது குறித்து, சுகாதார துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும், எம்.எல்.ஏ., சந்திரன் எச்சரித்தார்.
ரேஷன்
கடையில்
ஆய்வு
திருத்தணி காந்தி ரோடு மெயின் சாலையில் இயங்கி வரும் ரேஷன் கடையில், எம்.எல்.ஏ., சந்திரன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, ரேஷன் கார்டுதாரர்களிடம் தரமான பொருட்கள் வழங்குகிறார்களா? அரிசி, சர்க்கரை, பாமாயில் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தார்.